காலை நேரம். மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாஸ்கரன் சலிப்புடன் எழுந்தான். அவன் முகத்தில் சோகத்தின் சாயல். ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. வழக்கமாக நேரத்திற்கு வரும் தபால்காரன் வரக்காணோம். நெடுநேரமாக வீட்டிற்குள் போவதும், வீதிக்கு வருவதுமாக இருந்த பாஸ்கரன் முடிவாக தபால்காரனை நினைத்து முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள்ளேச் சென்றான். அவனது மனைவி பிரேமா காபியுடன் அவன் அருகில் வந்து நின்றாள்.

” இன்னைக்கும் உங்கள் கதை வரலையா? ” என்றாள் கேலியாக.

” பிரேமா! உனக்குக் கிண்டலாக இருக்கு. இப்போ அப்படித்தான் கேலி பேசுவே. பாரேன் ஒரு நாளைக்கு இந்த நாடு போற்றும் பெரிய எழுத்தாளனாக ஆகத்தான் போகிறேன் ” என்றான்.

” உங்களுக்கு இந்தக் கதை எழுதற பைத்தியம் என்றுதான் தீருமோ. இதே நினைப்பில் இரவில் சரி யாக தூங்குவதும் இல்லை. எங்கே உங்க அலட்சியப் போக்கால் செய்கிற வேலையும் போய் விடுமோ என்று பயமாய் இருக்கு ” என்றாள் வேதனையாக.

” அடி பைத்தியமே, கேவலம் இந்தக் கொஞ்ச சம்பளத்துக்கா இப்படி பயப்படுகிறாய்? ஒரு மணி நேரம் உட்கார்ந்தால ஆயிரம் ஆயிரமாய் சம்பாதித்து விடுவேன் “.

” நீங்களுந்தா கதை எழுத ஆரம்பித்து இரண்டு வருடமாச்சு. ஒரு கதையும் வந்தபாடில்லை. வீணா எழுதி, எழுதி மூலையும் காய்ந்திடுச்சி. பேனா முனையும் தேய்ந்திடுச்சி. சரி போங்க ஆபீஸ_க்கு. மணி பத்து ஆகப் போவுத” என்றாள்.

பாஸ்கரன் குடும்பத்தில் நாள் தவறினாலும், இதுபோல் பேச்சும் கேலியும் இல்லாத நாளே இல்லை. பாஸ்கரனுக்குத் தனது எழுத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கை.

பாஸ்கரன் அவசர அவசரமாக ஆபீஸ_க்குக் கிளம்பினான். வழியில் அவனது சிந்தனை ஓட்டம் – நினைவுகள் அலை பாய்ந்தன. மனைவி சொன்ன சொற்கள் அவனது காதுகளில் ரீங்காரமிட்டன. உள்ளத்தில் ஏமாற்றம் மோதி, மோதி அவனை நடக்க விடாமல் தடுத்தது.

பாஸ்கரனுக்குச் சிறுவயது முதல் கதை படிப்பதிலும், எழுதுவதிலும் மிகுந்த ஆசை. அந்த ஆசை இதயத்தில் உந்த எழுதினான்.

அவனது தந்தை சாதாரண ஆரம்பப்பள்ளி ஆசிரியர். அவனை எஸ்.எஸ்.எல்.சி. வரை மிகுந்த கஷ்டத்தில் படிக்க வைத்தார். எப்படியோ யார் யாரையோ பிடித்து ஒரு அலுவலகத்தில் வேலையும் வாங்கிக் கொடுத்தார். தன் தகுதிக்கு ஏற்ப பிரேமாவை தன் மகனுக்குத் திருமணமும் செய்து வைத்தார்.

திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. இரவில் பாஸ்கரன் நெடுநேரம் தூங்க மாட்டான். ஏதாவது எழுதிக் கொண்டே இருப்பான். எத்தனையோ இன்ப இரவுகளை இப்படியே வீணாக்கி விட்டான். பிரேமாவின் இதயத்தில் ஏக்கம் குடிபுகுந்தது. பெண்மைக்குரிய ஆசை அவளையும் விடவில்லை. குழந்தை இல்லாத குறை அவளை நாளுக்கு நாள் அரித்துக் கொண்டிருந்தது. ஆனால் பாஸ்கரனோ அதைப்பற்றிச் சிந்திப்பதே இல்லை.

ஒருநாள் பிரேமா மிகவும் வற்புறுத்தியதால் இருவரும் டாக்டரைப் போய் பார்த்தனர். அவனைப் பரிசோதித்த டாக்டர், ” மிஸ்டர் பாஸ்கர்! உங்கள் உடம்பில் எந்த தவறும் இல்லை. நீங்கள் உங்கள் கவனத்தைச் சிதறவிடாமல் கொஞ்ச நாள் இல்லறத்தில் மகிழ்ச்சியோடு இருங்கள் ” என்று சொல்லி விட்டார்.

டாக்டரின் அறிவுரை அவன் மனதை மாற்றவில்லை. இரவு பகலாகக் கதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பினான். அவனது துரதிர்ஷ்டம் தேர்ந்தெடுக்கப்படாமல் திரும்ப வரும். சில போன வழியோடு நின்று விடும். அவனும் மனம் தளரவில்லை. தனக்கும் ஒருநாள் நிச்சயமாக நல்ல காலம் வரும் என காத்திருந்தான். ஆனால், அந்த நல்ல காலம் இதுவரை வந்ததே இல்லை. வீட்டில் தினமும் ஒருவருக்கொருவர் மோதுவதும், மன வருத்தம் கொள்வதும் அன்றாட பிரச்சினையாகிவிட்டது.

ஒருநாள் அலுவலகத்தில் பாஸ்கரனின் நண்பன் சேகர் ஒரு பத்திரிக்கையோடு வந்தான்.

” என்னப்பா பாஸ்கரா! நீதான் பெரிய பத்திரிக்கையில் வராத கதை ஆசிரியனாச்சே! இதோ பாரேன் இந்தப் பத்திரிகையில் ஒரு பரிசுப் போட்டி வைத்திருக்கிறார்கள் ” என்றான்.

பாஸ்கர் ஆவலோடு அந்தப் பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தான்.

” எழுதத்துடிக்கும் இளம் எழுத்தாளர்களே! உங்கள் புகைப்படத்துடன் கதை அனுப்புங்கள். முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம்! ” என்று அறிவிப்பு செய்திருந்தார்கள்.

பாஸ்கரன் அமைதியாக விளம்பரத்தைப் படித்தான். இது போல் எத்தனையோ விளம்பரங்களைக் கண்டு பல கதைகளை எழுதி ஏமாற்றத்தைத் தழுவியவன் அவன். அதனால், அந்த விளம்பரம் அவனுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

மாலையில் வீடு திரும்பிய பாஸ்கரனுக்கு மீண்டும் ஒரு சபலம். தனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டான். இரவு முழுவதும் சிந்தனையில் சுழன்ற அவன் கரங்களில் ஒரு கதை தவழ்ந்தது.

காலையில் அதனை அந்த பத்திரிக்கைக்கு அனுப்பப் புறப்பட்டான். அவனது மனைவி அவனருகில் வந்தாள்.

” இது எழுத்தாளரின் புதிய கதையா? இதுமட்டும் வரப் போகிறதா?”

” பிரேமா! உன் அபசகுண வார்த்தைகள்தான் என் கதையின் மதிப்பைக் குறைக்கின்றன. இனிமேல் இதமாதிரி பேசினால் நான் மனிதனாக இருக்க மாட்டேன் ” என்றான் கோபமாக.

” அட ஏங்க சத்தம் போடுறீங்க? உங்களுக்கும் கதைக்கும் ராசியே இல்லை! ”

” பிரேமா! இதுதான் நான் எழுதும் கடைசி கதை. இதுவும் வரவில்லையானால் இனி என்றுமே எழுதப் போவதில்லை. ”

” ஐயோ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் தெரியாமல் பேசிவிட்டேன் ? என்றாள்.

நாட்கள் நகர்ந்தன. பல நாட்கள் முடிவை எதிர் பார்த்து ஏமாந்தான். எந்த பதிலும் இல்லை அவனது எண்ணக் கோட்டை தகர்ந்தது. அவன் நெஞ்சில் ஊறிய கற்பனை ஊற்று வற்றத் தொடங்கியது.

அவன் அன்று சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். அவனுடைய நண்பன் பத்திரிக்கையைக் கொண்டு வந்து கொடுத்தான். அவனுடைய கதை பரிசுபெறவில்லை என்பது தெரிந்தது.

பாஸ்கரனின் கரங்களிலிருந்த பத்திரிக்கை கீழே நழுவியது. அவன் இதயத்தில் ஏதோ உரு துன்பச்சுமை அழுத்தியது. கண்களில் நீர் முட்டியது. அப்படியே அசைவற்று நின்றுவிட்டான்.

அவனது நிலையைக் கண்ட சேகர்… ? பாஸ்கரா ஏம்பா சிலையாக நின்றுவிட்டாய்? பரிசு கிடைக்காட்டி போகுது. மனதைத் தளரவிடாதே! ? அவனது அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்தில் சோகத்தைத்தான் நிரப்பின. தன் நண்பனை கட்டிப் பிடித்து அழுதான்.

“சேகர்! இந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாதப்பா ” என்றான்.

சேகர் பாஸ்கரனுக்கு ஆறுதல் சொன்னான்.

பாஸ்கரனின் மனதில் ஒரு சூன்யம் உருவாகத் தொடங்கியது. ஏமாற்றத்தால் புழுங்கிய நெஞ்சம் சூடேறியது. தடுமாறிய உள்ளத்தோடு வீட்டை நோக்கி நடந்தான். வேதனைக் சுமை நெஞ்சை பிழிந்தது.

இரவு நெடுநேரம் மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசினான். விளையாடி னான். முதலிரவைப் போன்ற உணர்வு பிரேமாவுக்கு ஏற்பட்டது. தன் கணவனின் போக்கைக் கண்டு மனம் மகிழ்ச்சியால் துள்ளியது.

இன்பமாக இரவை கழித்த ஆனந்தத்தில் பிரேமா எழுந்து குளித்து எல்லா வேலைகளையும் வேகமாக முடித்தாள். பாஸ்கர் அன்று ஆபீஸுக்கு லீவு என்பதால் அவனை எழுப்பவில்லை.

” சார் தந்தி ”

தபால்காரனின் குரல் அடுப்படியில் இருந்த பிரேமாவை அதிர்ச்சியடையக் செய்தது. வீதிக்கு வந்து தந்தியை வாங்கிப் படித்தாள்.

” சில விதிகளுக்குட்பட்டு உங்கள் கதை எம்மால் தேர்வு செய்யப்படவில்லை. என்றாலும, நமது கதை போட்டியின் நடுவர்களில் ஒருவரான பிரபல பட தயாரிப்பாளர் சினிமா எடுக்க தங்கள் கதையை வாங்கிக் கொண்டார். தங்கள் ஒப்புதல் கிடைத்ததும் முன் பணமாக பத்து லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார் “.

தந்தியில் உள்ளடக்கப்பட்ட வார்த்தைகள் அவளது உள்ளத்தில் புதிய மலர்ச்சியைக் கொடுத்தது. ஆனந்தத்தால் துள்ளியபடியே கணவன் முன் சென்று நின்றாள். தனது பூக்கரங்களால் எழுப்பினாள். அவன் பிணம் போல் கிடந்தான். இதயம் நடுங்கியது. கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. கதறி அழுதாள். தன் கணவனின் உடலை எடுத்து மடிமீது வைத்துப் புலம்பினாள். முகத்தோடு முகம் பதித்தாள்.

அவனில் இன்னமும் உயிர் இருப்பதை அறிந்து கொண்ட அவள் அவசர சிகிட்சைக்காக ஆம்புலன்ஸை கூப்பிட்டாள்.

உங்கள் கதை சினிமாவாகப் போகிறது. நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள் என்றபடி இறைவனிடம் மன்றாடினாள்.

பாஸ்கரனின் கதை சினிமாவாகப் போகிற செய்தியைச் சுமந்த பத்திரிகையுடன் சேகர் வந்து சேர்ந்தான்.

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..