– கே.எம். சுந்தர்


ஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது.

மர முண்டுகள் வந்து இறங்கியவுடன் 60 வயதுக்கும் சற்று அதிகமான “கருப்பசாமி”யும் அடுத்த நாள் காலையில் அதிகாலையில் தன்னுடைய சரக் புரக் செருப்புகளோடு வந்து விடுவான். அவனுடைய கெட்டித் தோல் செருப்புகள் கரடு முரடு தன்மையோடு சாதாரணமானவர்கள் அணிய முடியாதவாறு பார்க்கும்போதே மிக கனமாக இருக்கும் என்பதும் நினைவில் இருக்கிறது.

தலையில் ஒரு சுருமாடும், இடுப்பில் வேட்டி நன்றாக சுருட்டப்பட்டு தார்பாய்ச்சிக் கட்டபட்டிருக்கும். அதற்குள் இரண்டு மூன்று ‘ஆப்புகள்’ மரத்தை பிளப்பதற்காகவும், இரண்டு மூன்று கோடரிகள் தோளில் சுமந்தவாறு தன்னுடைய ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் வந்து சேர்ந்து விடுவான். சாட்டை மாதிரி உருவிட்ட உடல், சதைப் பற்று சிறிதும் இல்லாமல், கறுப்புத் தங்கம் போல வியர்வையில் குளித்த கருப்பசாமியை பார்கும்போது குதிரையின் நினைவுதான் வரும்.

ஒரு பதினோரு மணிக்கு அவனுடைய மனைவி ‘இராமாயி’ பித்தளை தூக்கு போசி எனப்படும், ஒரு இரண்டு லிட்டர் பிடிக்கும் பாத்திரத்தில் கஞ்சி கொண்டு வருவாள், அந்த பித்தளை பாத்திரத்தை தூக்குவதற்கே நிறைய சாப்பிட வேண்டும். அம்மாவும் இடையில் நீராகாரமும், மோரும் கொடுப்பாள் என்பது நினைவு.

ஹோட்டல் பெரியார் லாட்ஜ்-ன் மாடி படிக்கட்டுகளில் எழுதியிருக்கும் ‘இங்கே தங்க அறைகள் கிடைக்கும்’ என்பதை அறைகள் தங்கத்தாலேயே செய்யப்பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நான் அவன் கருப்பாக இருந்ததால் “கருப்பசாமி” என்ற பெயர் இருக்கும் போலிருக்கிறது என்று வெகுநாள் நினைத்துக் கொண்டிருந்து இருந்திருக்கிறேன்.

நான் பள்ளி செல்வதற்கு முன்பாக மலை போல் குவிந்திருக்கும் மரத் துண்டுகள், பள்ளியில் இருந்து திரும்பி வரும்போது விறகுகளாக வெட்டப்பட்டு சீராக சாலையின் ஓரம் அடுக்கப்பட்டிருக்கும்.

பள்ளிக்குச் செல்லாத நாட்களில் கருப்பசாமி விறகு பிளப்பதை பார்த்துக் கொண்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து இருப்பேன். முதலில் விறகுகளை அளவு, கடினத் தன்மை வாரியாக பிரித்துக் கொண்டு, கீழே இரண்டு சிறிய மரத்துண்டுகளை வைத்து, இரண்டு கைகளாலும் அள்ளக் கூடிய ஒரு பெரிய மரத் துண்டை வைத்து பிளப்பதற்கான ‘ஆப்பு’வை சொருகி சம்மட்டியால் “உஸ்’ என்ற சத்தத்துடன் ஒரே அடி! இரண்டாவதாக அடிப்பதை பார்த்ததே இல்லை. கவனச் சிதைவுகளோ, இடைவேளைகளோ கிடையாது!

அம்மாவும் என்னை ரொம்பவும் கொஞ்சிக் கொள்வாள், தின்பதற்கும் ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பாள். நண்பர்கள் அக்கப்போர் இல்லாமல் குழந்தை ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அவளுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இரவு அம்மா சொல்லும் கதையில், உண்மை சொல்லும் விறகுவெட்டிக்கு தேவதை கொடுக்கும் தங்க, வெள்ளி கோடரி போல கருப்பசாமிக்கும் விரைவில் கிடைக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.

ஸ்டீபன் அண்ணன் மற்றும் அதன் 13 சகோதர, சகோதரிகளுடன், நானும் என்னுடைய சிறிய கைகளில், நான் சுமக்கும் அளவுகளில் உள்ள விறகுகளை எடுத்துச் சென்று தாழ்வாரத்தில் அடுக்கிய பிறகு, அதற்கு கூலியாக கிடைக்கும் கடலை மிட்டாயும், வெண்ணை ரொட்டியும் சுவைத்தது போல் இன்றும் வேறு எதுவும் சுவை தருவதில்லை.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..