ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே படித்த உயிர்த்தோழன் பீட்டர் ஜோன்சை தன்னிடமிருந்து பிரித்து ஐந்தாம் வகுப்பு ‘B’ செக்‌ஷனில் போட்டுவிட்டதைச் சொல்லி அழுது அழுது காய்ச்சலே வந்துவிட்டது கலைச்செல்வனுக்கு.

”செக்‌ஷன் மாத்திட்டாங்கதான் ஆனாலும் நாம சேர்ந்தே தானே ஸ்கூலுக்கு போகப்போறோம் ? மறுபடியும் வீட்டுக்கு வரும்போதும் சேர்ந்தே வருவோம்” என்று சிரித்துக்கொண்டே சொன்ன பீட்டருக்கும் இன்று தனியாக நடந்து பள்ளிக்கூடம் செல்வது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது, ஏதோ ஒரு வெற்றிடம், மனதிற்குள் ஒரு சின்ன உறுத்தல். எதையோ மறந்து விட்டதைப்போன்ற ஒரு உள்ளுணர்வு.

பக்கத்து வேப்பமரத்தடியில் பையை இறக்கி வைத்து கணக்கு நோட்டு, ஜாமெண்டரி பாக்ஸ் எல்லாவற்றையும் எடுத்தாகிவிட்டதா என்று சரிபார்த்தான் பீட்டர், எல்லாமே இருந்தது இல்லாதது அவன் நண்பன் கலை மட்டும்தான். மீண்டும் பையை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தவன் ஏனோ அந்த கோவில் குளத்தைக் கடக்காமல் நின்றுவிட்டான்.

அங்கே தினமும் கலைச்செல்வன் தோப்புக்கரணம் போட்டு கும்பிடும் தொப்பை கணபதி சிலைவரை வேகமாக ஓடிப்போய் பையை கழற்றிவைத்துவிட்டு மரத்தடி பிள்ளையார் சிலைக்கு முன் முட்டி போட்டுக்கொண்டான்.

இதை பார்த்ததும் கோவில் குளத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த செண்பகம் மாமிக்கு இதழோரமாய் கசிந்தது ஒரு சின்ன புன்னகை “ஏண்டாப்பா பீட்டர் இது கர்த்தர் சிலை இல்லடா கணபதி சிலை, இங்க தோப்புக்கரணம்தான் போடணும் முட்டி போட்டு கும்பிட வேண்டாம் ” என்றார் மாமி.

அவரை அதுவரை கவனிக்காத பீட்டர் இப்பொழுதுதான் கவனித்தான் ஆனாலும் ஒரு நொடியில் மீண்டும் சிலையை நோக்கி திரும்பிக்கொண்டான்.

வேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான? பசிக்குமே,..அதுக்குதான் வந்தேன்”.

அடுத்த ஐந்தாவது நொடி வெற்றிடங்களையெல்லாம் நிறப்பிக் கொண்டவனாய் எழுந்து நடந்து கொண்டிருந்த பீட்டரோ, என்ன சொல்வதென்றும் தெரியாமல் குடத்தோடு குளத்தருகில் சிலையாகிப்போன மாமியோ, அவ்வளவு ஏன் ஒரு சோற்றுப் பருக்கையை கூட்டுக்குள் இழுக்க பிரம்ம ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த அந்த எறும்போ கூட கவனிக்கவே இல்லை. இப்பொழுது மண் திட்டின் மேல் முட்டிப் போட்டிருந்த அந்த பிள்ளையார் சிலையை!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..