Kambanகம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள் இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் !
நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்! – அஞ்சாதே
கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?!
செம்பட்டுப் போன்றே செழிப்பு!

அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே
கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! – நெஞ்சும்
சுவைக்கும் பொருளைச் சுரந்தவர் கம்பர்!
அவைக்கும் அவரே அழகு!

பாட்டால் உயிர்கொடுத்த பாவலர்! கம்பரே
வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்! – கேட்டாலே
போதும் அரும்பாக்கள் ஓதும் பொழுதினிலே!
காதும் குளிரும் கமழ்ந்து!

கவிச்சக் கரவர்த்தி கம்பனைப் போற்ற
புவிமேல் புலரும் புதுமை! – தவிக்காதே
காக்கும் கடவுளும் கம்பரே! இன்பமாய்
வாக்கும் மணக்கும் மலர்ந்து !

அலைந்து திரிந்தே அமுதெனக் கொண்டேன்!
சிலைபோல் மிளிரும் சிறந்து! – கலைமகள்
அந்தாதி கம்பர் அளித்த செல்வம்! போற்றுக!
நந்தவனம் ஆகும் நினைவு!

நாமகள் அன்பினை நாளுமே பெற்றகம்பர்
வாழ்வினைக் கண்டிட ஆசையோ! – பாவினைப்
பாடும் மனமேநீ பாடுக அந்தாதி
கூடிடும் இன்பம் குவிந்து !

கலைவாணி நற்கருணை கண்களிலே தங்கும்!
தலையையும் காக்கும் தழைத்து! – மலையின்ப
அந்தாதி பாடினால் அன்னைக் கதுபோதும்!
சந்தன வாசத் தமிழ்!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! – தேயவழி
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து!

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும்
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! – அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...