t-roobanஎழுத்துலகில், பொதுப்பணிகளில் அயராது தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சேவை செய்துவரும் கவிஞர் த.ரூபனைச் சந்தித்தோம். அவர் காலடித் தடங்களைப் பார்ப்போம் …

உங்களைப்பற்றிய அறிமுகத்தை சொல்லுங்கள்?

நான் ஊடகங்களில் த.ரூபன் என்றே அறியப்படுகிறேன். எனது பெற்றோர்களால் சூடப்பாட்ட பெயர், தம்பிராசா – தவரூபன். நான் பிறந்து தவழ்ந்த இடம், திருகோணமலை மாவட்டத்தில் வயலும் வயல் சார்ந்த இடமான மருதநிலம் எனும் ஈச்சிலம்பற்றையில் தான். அழகிய இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த பச்சை வயல்களும், அவற்றை சுற்றி இனிய தென்னை, பனை, கமுகு ஆகிய மரங்களும் நிறைந்தது பார்ப்பவர் எவரையும் கொள்ளை கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கும் எம் ஊர். அவ்விடம் என் பிறப்பிடம் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. மேலும், என் கல்வியை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தி.மு. ஸ்ரீ சண்பக மகாவித்தியாலத்திலேயே பயின்றேன். உயர்தர வகுப்பில் கலைப் பிரிவில் முதல் முறையிலேயே சித்தியடைந்து பெற்றோரின் கனவை நிஜமாக்கி நானும் பெருமையடைந்தேன். மேலும் ஆர்வம் மிகுதியால் வெளிவாரியாக பட்டப் படிப்பை முடித்து தி.மு. மாவடிச்சேனை வித்தியாலத்தில் ஆசிரியாக சில காலம் கடமையாற்றினேன். வேலை தேடி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆசிரியத் தொழிலை விட்டு விட்டு, தாயையும் தாயகத்தையும் விட்டு, தனியாகவே அயல் தேசம் நோக்கி புறப்பட்டேன்.

தாங்கள் புலம்பெயர்ந்ததற்கான நோக்கம் பற்றி சொல்லுங்கள்?

இது ஒரு சங்கடமான கேள்வி தான் எங்கள் பிரதேசத்தில் 2006 ம் ஆண்டு யுத்த நடவடிக்கைகள் முற்றிய நிலையில், பாரிய அழிவுகளை நாம் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. வீடும், வாழ்வதற்குரிய ஏனைய வாழ்வாதாரங்களும் சிதைக்கப்பட்ட நிலையில், உயிர் தப்பினால் போதும் என ஓடினோம். மூட்டை முடிச்சுகளோடு அடைக்கலம் தேடி, ஊர் ஊராக அலைந்தோம். பின் மட்டக்கிளப்பில் அகதியாகினோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் 2008 ல் திரும்பவும் சொந்த இடமான திருமலைக்கு திரும்பினோம். ஆனால் எல்லாவற்றையும் இழந்த நிலையில் எம்மால் எதிர்பார்த்தபடி வாழ்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேன். சுமைகள் என் இமைகளை மூடவிடவில்லை. வேதனையின் கொடூரத்திற்கு முகம் கொடுக்க முடியாது, குடும்ப அங்கத்தவர் அனைவரும் துவண்டநிலையில், தலைப்பிள்ளையான யான், என் ஒருவன் ஊதியம் மூக்குப் பொடிக்குச் சமானம் என்று எண்ணியபடி மனதை திடப்படுத்திக் கொண்டு, தோள் கொடுக்கத் துணிந்தேன். பெற்றவரின் கண்ணீருக்கு அணை போட அலைகடல் தாண்டினேன். முன்னோர்கள் சொன்னபடி திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு இணங்க மலேசியா வந்தேன்.

தங்களின் இலக்கிய ஈடுபாடு பற்றி சொல்லுங்கள்?

சிறு வயதில் இருந்தே தமிழ்ப் பற்று எனக்கு அதிகம். அந்நிய தேசத்தில் அதன் அவசியத்தை அதிகம் உணர்ந்தேன். அதனால் பற்று மேலும் அதிகமாயிற்று. அழிந்து விடுமோ எனும் ஆதங்கப் பட்டேன். தாய் நாட்டில் அடிமை நிலையும் அவலங்களும் மிகுந்திடவே, ஏதாவது சாதிக்கவேண்டும் எனும்வெறி எனை உந்த, ஆயுதத்திற்கு பதிலாக பேனாவை கையில் எடுத்தேன். கோபம், கவலை, பரிதாபம் எனை ஆட்கொள்ளும் போது எல்லாம் எழுதி என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். கவிதைகள, சிறு கதைகள் , கணினி சார்ந்த விடயங்கள் என்று எழுதத் தொடங்கினேன். எழுத்துலகில் என்னை முழுமையாக அர்ப்பணித்த வண்ணம் வாழ்கிறேன். ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் என்ற எனது வலைப்பூவில் எனது படைப்புக்கைளை எழுதி வருகிறேன்.

தங்களின் படைப்புக்கள் எப்படியான ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.?

என் படைப்புகள் வலைப்பூவில் மட்டுமல்லாது, நமது தமிழ்நெஞ்சம் , இலண்டன் – காற்று வெளி, இந்தியா – முத்துக்கமலம் , வல்லமை & இனிய நந்தவனம் மாத இதழ், இலங்கை – ஜீவநதி & கவிஞன் மாத இதழ்கள், மலேசிய தமிழ் மலர் , மலேசிய மக்கள் ஓசை, & மலேசிய நண்பன் ஞாயிறு மலர், கத்தார் – தமிழ் டைம்ஸ் இதழ்களிலும் மற்றும் ஒவ்வொரு வாரமும் சூரியன், எழுச்சி வானொலி பேற்றவற்றில் மட்டுமல்லாது இலங்கையில் வசந்தம் தொலைக்காட்சியிலும் எனது ஆக்கங்கள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் தமிழ்வளர்ச்சிக்காக உலகிலுள்ள தமிழ் இளம் எழுத்தாளர்களை ஊக்கப் படுதும்முகமாக பல போட்டிகளை நடாத்தி வருகிறேன். இவற்றில் புதுக்கவிதை மரபுக் கவிதை, கட்டுரைகள் என யாவும் அடங்கும். பண்டிகை தினங்களான தீபாவளி, தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்புகளை சிறப்பிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் போட்டிகள் நடாத்தி சிறந்த படைப்புகளை தேர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறேன்.

மேலும் மலேசிய இந்திய எழுத்தாளர்கள் ஒன்று கூடலும் இடையிடையே நடந்து வருகிறது. இவற்றினூடாக நான் மிகவும் மகிழ்ச்சியாக செயல் படுகிறேன். இவைகள் எனக்கு மனவமைதியையும் திருப்தியையும் அளிக்கின்றன .

மலேசியாவில் வசித்துவரும் தங்களின் பணி என்ன? இங்கு தாங்கள் செய்து வரும் இலக்கிய பணி என்ன?

மலேசியாவில் ஆரம்ப காலங்களில் பல சிரமங்களை அனுபவித்துள்ளேன். இப்பொழுது ஒரு நல்ல கம்பெனியொன்றில் பணி புரிகிறேன். அப்பணியை மகிழ்வாய் செய்கிறேன். எனது தொழில், எனது தமிழிலக்கியப் பணிக்கு எந்த வகையிலும் இடையூறாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாங்களின் படைப்பாக்கங்கள் மற்றும் வெளியிடபட்ட நூல்கள் பற்றி சொல்லுங்கள்?

2014 ல் இரவைத்தேடும் விடியல் என்ற மின்னூல் வெளியிட்டேன். 2015ல் எனது முதல் கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா இனிய நந்தவனம் பதிப்பகம் ஊடாக வெளியீடு செய்தேன்.

இலக்கிய உலகில் தாங்கள் பெற்ற விருதுகள் என்ன?

நான் வலைப்பூ ஆரம்பித்து எழுத்துலகில் நுழைந்து எட்டு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. அதற்கு முன்பாகவே, எனது படைப்புக்கள் வானொலிகளிலும் இலங்கையில் உள்ள பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.

இந்தியாவிலுள்ள கவிஞர் ரமணி ஐயா அவர்கள் எனக்கு கவிஞர் என்ற பட்டம் தந்து சிறப்பித்தார். வலையுலகில் … எனது வலைப்பூவை பார்த்து வலைப்பூ விருதுகள் ஐந்தை பிற நாட்டு கவிஞர்கள் தந்திருக்கின்றார்கள்.

2014 ல் மலேசியா எழுத்தாளர் சங்கமும், இந்தியாவிலுள்ள இனிய நந்தவனம் மாத இதழும் இணைந்து நடாத்திய நிகழ்வொன்றில் கலை வேந்தர் என்ற விருதும், தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் கவினெழி, கவியருவி என்ற விருதும் தந்து சிறப்பித்தார்கள்.

இலக்கிய தடயத்தில் தங்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

எனது முதல் கவிதை தொகுதியான ஜன்னல் ஓரத்து நிலா பதிப்பித்த இனிய நந்தவனம் பதிப்பகம் மூலம் இவ்வாண்டு (2016) மே மாதம் எனது சிறுகதை புத்தகம் வெளிவருகிறது.
மற்றும், நான்கு கவிஞர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டு முயற்சியில் கவிதைத் தொகுப்பு. சிறுகதை வெளியிட உள்ளோம். இது சம்மந்தமான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இலங்கையில் திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் புதிதாக வலைப்பூ ஆரம்பிப்பதெப்படி? ஒரு கவிதையை பதிவிடுவது சம்மந்தாமான பயிற்சி வகுப்புக்கள் இலக்கியத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நடத்தி வருகிறோம்.

இலங்கையிலுள்ள தடாகம் இலக்கிய அமைப்புடன் இணைந்து ஊடகப்பிரிவுக்கு பொறுப்பாகவும் செயற்பட்டு வருகிறேன். உலகில் வாழும் பல திசையிலிருந்து தேர்ந்து ஐம்பது கவிஞர்களின் தொகுப்பாக தடாகத் தாமரைகள் இவ்வாண்டில் வெளிவருகிறது. முனைந்து செயல்பட்டு வருகிறோம்.

வளரும் எழுத்தாளர்களுக்கு படிப்பினையாக தாங்கள் சொல்ல நினைக்கும் விடயங்கள்?

கத்தியை தீட்ட தீட்டத்தான் அது கூர்மையடையும். அதைப்போல ஒவ்வொரு படைப்பாளர்களுக்கும் முக்கியமானது வாசிப்பு. வரலாற்று நாவல், சிறுகதை, கவிதை பேன்ற நூல்களை படிக்க வேண்டும். அதுமட்டும் அல்லாது பத்திரிகை இணைய சிற்றேடுகள் போன்றவற்றுக்கு படைப்புக்களை அனுப்பி உலகில் அடையளப்படுத்திக் கொள்ளல் வேண்டும். நமது சமுகத்தை நல்வழிப்படுத்தும் படைப்புக்களை படைக்க வேண்டும்.

” வாழட்டும் தமிழினம் வளரட்டும் நம் தமிழ் மொழி “


3 Comments

ரஞ்சனி · மார்ச் 21, 2016 at 10 h 50 min

எவ்வளவோ துன்பங்களுக்கு இடையில் வெளிநாடு (மலேசியா) வந்து இங்கு காலூன்றி தமிழை வளர்த்து வருவது மிகவும் போற்றுதலுக்கு உரியது. தமிழ் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் போட்டிகள் நடத்தி ஊக்குவித்து வருவது மிகவும் சிறந்த ஒரு பணி. எனக்கென்ன நான் பிழைத்தால் போதும் என்றிருக்காமல், சமுதாயத்திற்கும் நல்லது செய்யும் உங்களை மனமாரப் பாராட்டுகிறேன்.

வளரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை விடயங்களும் எல்லா எழுத்தாளர்களுக்கும், எழுத்துலகில் சாதிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கும் பொருந்தும்.

மேலும் மேலும் உங்கள் ஆர்வங்களும், சமூகத் தொண்டுகளும் தொடர்ந்து நடக்க நல்வாழ்த்துகள்!

ஈழபாரதி · மார்ச் 21, 2016 at 13 h 06 min

வாழ்த்துக்கள் வளரட்டும் தங்களின் தமிழ்ப்பணி.

பெயரிலி · மார்ச் 21, 2016 at 14 h 57 min

உங்களிடம் படித்த மாணவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பெய்யென பெய்யும் மழை

அரை நூற்றாண்டுக்கும் முன்பேத் தமிழிலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமாகி மரபுக்கவிதை, இலக்கியச் சொற்பொழிகள், பட்டிமண்டபங்கள், வழக்காடு மன்றங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், திறனாய்வு உதவி, எனப் பலதுறைகளில் தன் சுவடுகளை அழுத்தமாய்ப் பதித்துத் தொடருந் தமிழறிஞர் தங்க அன்புவல்லி அம்மாவுக்கு வணக்கம் சொல்லி மகிழ்ந்து வாழ்த்த வேண்டித் தொடங்குகிறேன்.

 » Read more about: பெய்யென பெய்யும் மழை  »

அறிமுகம்

பெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்

தமிழ்நெஞ்சம் இதழின் இணையாசிரியர் முனைவர். பெண்ணியம் செல்வக்குமாரிக்கு மிகச் சமீபத்தில் ‘‘ஆச்சார்யா சக்திவிருது’’, ‘‘திருப்பூர் சக்தி விருது’’ என இருவிருதுகள் அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆச்சார்யா நிறுவனம், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இவ்விருதுகளை வழங்கிப் பெருமைபடுத்தியது.  » Read more about: பெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்  »

அறிமுகம்

இராம வேல்முருகன்

கல்வித்தகுதிகள்

  • BSc Zoology
  • MSc Zoology
  • BEd biology
  • History
  • BLIS library science
  • MLIS.
 » Read more about: இராம வேல்முருகன்  »