கொட்டிய வெயிலில்
கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து
கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு
பொன் மஞ்சள் தாவணியை
விரல்
பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு
தன் கொல்லை வாசல் வழியே
செங்கை அசைத்த வண்ணம்
வெளியேறிக்கொண்டிருந்தான்
ஙஞணநமனமாய்த் தணிந்த
கசடதபறச் சூரியன்

அம் மதுர மாலையில்
ஓர் ஓடைக்கரையில் ஓடும் மீன்களை
ஒவ்வொன்றாய்க் குசலம் விசாரித்த வண்ணம்
குந்தியிருந்தான் கவியொருவன்

அவன் தலை முகட்டில் வெண்மையின் ஆட்சி
முகத் திரையில் சுருக்கத்தின் காட்சி
இதழ்களிலோ நல்ல
கொஞ்சுதமிழால் குழைத்தெடுத்த
ஓர் இளமைப் பாட்டு

ஆவலின் உந்துதலில் எழுந்த ஓர் கேள்வி
தொண்டைக்குழிதாண்டி
என் மொத்தக் கழுத்தையும்
கெளுத்தி முள்ளாய்க் குத்த
அருகே சென்றேன் அவனிடம் கேட்டேன்

“கவிஞனே… கவிஞனே… உன் வயதென்ன?”

நிமிடம் ஒன்று நடந்து நடந்து
என்னை மட்டுமே கடந்து போனது
அந்தக் கவிஞனோ தன் இதழ்களின் குறுக்கே
கெட்டியாய் ஒரு மௌனப் படுதாவையே
கட்டி வைத்திருந்தான்

காதில் விழவில்லையோ
என்ற கவலையில் கேட்டேன் மீண்டும்
என் குரல் மலரில்
சிறு முட்களையும் சேர்த்துக் கட்டி

“ஓ….. கவிஞனே… கவிஞனே….
உன் வயதென்ன….?”

மீன் மொழி கேட்டுக்கொண்டிருந்த
தன் செவிப்பாதை வழியே
ஒரு காண்டாமிருகம்
தறிகெட்டு ஓடுவதாய்த் திடுக்கிட்டான்

நீரில் பதிந்த விழிகளை நிமிர்த்தும் மனமின்றி
நிதானமாய்த் தன் கவியிதழ் விரித்தான்

ஓ…. நண்பனே
கவிஞனுக்கு ஏதடா வயது?

அவன்
பிறக்கும் போதே பெரியவன்
வாழும் போது இளையவன்

எழுதும் போதோ
அவன் வயது ஒன்றாகவும் இருக்கும்
ஒரு யுகமாகவும் இருக்கும்

எந்த வயதுக்குள் நுழைந்து எழுதினாலும்
எழுதி முடித்து மெல்ல வெளிவந்து விழும்போது
மீண்டும் அவன்
பெரியவனாய்த்தான் பிறக்கிறான்
நல்ல இளையவனாய்த்தான்
வாழ்கிறான் என்று கூறி

போ… போ….
உனக்கொன்றும் இது புரியாது என்று
என்னை விலக்கிவிட்டு
அந்த ஓடை மீன்களிடமே சென்று
தன் காதுகளைப் புதைத்துக்கொண்டான்

கவிஞனா இவன்
மகா திமிர் பிடித்த கிறுக்கன்
என்றெண்ணியவனாய்த்
தாளாச் சுடுமணலின்
தகிப்பில் நடப்பவன் போல் நான்
எட்டி எட்டி நடந்தோடினேன்

ஆனால்…
என்னை நிறுத்தி முத்தமிட்டன
அவன் நிறுத்தாமல் உதிர்த்த
தேவ சுகந்தம் பரப்பும் தேன் கவி வரிகள்

இப்போது என் காலுக்கடியில்
கடுஞ்சூட்டு மணல் இல்லை
எனக்கே எனக்கான
என் இனிய தமிழ்ச் சொந்தமண்
என் விரல்களை வேர்களாகக் கேட்டதுsun


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...