mellisaiththuuralkal_cover_rvகவிதை ஓர் அரிய கலை. நுண்ணிய கலை. கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புதக் கலை. கவிதையென்பது அது கூறும் பொருளில் மட்டுமல்ல, கூறும் முறையிலும் இருக்கிறது. கவிதையை எழுதுபவர் தான் பெற்ற உணர்ச்சிகளைத் தன் கவிதைகளைப் படிப்போரும் பெற வேண்டும் என்று எண்ணிச் சில உத்தியைக் கையாண்டு கவிதைப் படைப்பர். அந்த யுக்தி முறைகளால் கவிஞரின் உணர்ச்சியை அதில் பதிய வைக்கப்படுகிறது.

கற்பனை, சொற்களின் அமைப்பு முறை, ஒலி நயம், யாப்பு முறை, அணி நலன், தொடை நயம், குறிப்புப் பொருள், சுவைகள் போன்ற சில முறைகளை மேற்கொண்டு கவிதைகள் படைக்கப்பட்டிருந்தாலும், கவிதையைப் படிக்க வேண்டிய முறையில் இவை தோன்றுமாறு படித்தால் எழுதியவர் பெற்ற அனுபவத்தையே நாமும் பெற முடியும். படைப்பாளி மேற்கொள்ளும் யுக்திமுறைகளையெல்லாம் ஓரளவு விளக்கமாக எடுத்தியம்புவது கவிதையின் சிறப்பு.

கவிதையென்பது ஒலிநயம் அமைந்த அமைந்த சொற்களின் கட்டுக்கோப்பு. அஃது இன்பத்தை உண்மையுடன் இணைப்பது. அறிவுக்குத் துணையாக கற்பனையைக் கொண்டிருப்பது என்பது ஜான்ஸன் என்பாரின் கூற்று. கார்லைல் என்பார், ‘இசை தழுவிய எண்ணமே கவிதை’ என்று வரையறுக்கின்றார்.

‘மனிதச் சொற்களால் அடைய முடிந்த மகிழ்வூட்ட வல்லதும் செம்மை நிறைந்த கூற்றே கவிதையாகும்’ இது மாத்யூ அர்னால்டு கவிதைக்குக் கூறும் இலக்கணம்.

இசையுடன் சேர்ந்ததே கவிதையாகும். இசை இயல்பாகவே குழந்தை முதல் எல்லோரையும் கவரக்கூடியதாகும். மெல்லிசைத் தூறல்களாக தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா தனது ஒன்பதாவது நூலாக, நவரத்ன நூலாக, அறிவின் அறை கூவலாக, சிந்தனையின் சாகசங்களாக, கற்பனையின் சுவடுகளாக, வாழ்வின் வசந்தங்களை அள்ளி வீசும் முப்பத்தாறு பாடல்களை உள்ளடக்கிய நூலாகத் தந்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனது மனம் குதூகளிக்கிறது.

பல இலக்கிய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் இவர், இலங்கைக் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக்கான சிறப்புப் பட்டம் பெற்று ஊடகங்களிலும், நாளிதழ்களிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சியிலும் அதிகமாக பங்கேற்று தனது இலக்கிய பயணத்தில் நல்லதொரு தடம் பதித்து வருவது பெருமைக்குறியது. நாடுவிட்டு நாடு நன்கு அறிமுகமான இவருடைய படைப்புக்கள் இந்தியா, ஐரோப்பா, பிரான்ஸ், கனடாவென அறியப்பட்டிருப்பது சிறப்பு.

இவருடைய அனைத்து நூல்களையும் நுகரவில்லையென்றாலும் மெல்லிசைத் தூறல்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தமைக்காக மகிழ்கிறேன்.

இன ஒற்றுமை, காதல், அறிவுரை, தனிமனித உணர்கவுளென்று பறந்து விரிகிறது இவரது சிந்தனை. சின்ன வயதில் சீரான இவரின் பார்வை விரிந்து படர்கிறது.

சிறு பிள்ளையாய் நானிருக்கையிலே
பெரும் மகிழ்வுடனே கொஞ்சினீர்கள்
பருவ வயதடைந்ததும் என்வாழ்வு
திசை மாறாதிருக்க அஞ்சினீர்கள்

என பெற்றோரை நினைவு கூறுவதுடன், நில்லாமல்,

… … …
தாய் தந்தையைக் காப்பேனே
கடவுளிடம் கையேந்தியே அவர்களுக்கு
கருணைக் காட்டும்படி கேட்பேனே …

என பணிவிடையைப் பேணுகிறார்.

பிஞ்சு மனசிலும் நஞ்சை ஊற்றி
சொல்லால் நபிகளை வதைத்தனரே
தூதரின் மனதை உடைப்பதற்காக
வஞ்சனை வார்த்தையை கதைத்தனரே

என்று மக்காவில் பிறந்த மாணிக்கமான நம் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் பற்றி புகழ்கிறார். மெய் சிலிர்க்கிறது. இப்பாடல் ஈழத்து இசைமுரசு கலைக்கமால் அவர்களால் இசையமைக்கப்பட்டு மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் எனும் இறுவட்டில் வெளிவந்திருப்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

பாடகர் டோனி ஹஸன் அவர்களால் இசையமைத்து இலங்கை நேத்ரா தொலைக்காட்சியின் தீன்சுடர் நிகழ்ச்சியில் பாடப்பட்ட ரிஸ்னாவின் இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற பாடல் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது.

முப்பதாண்டு போர்க் காலம்
முடிவில் எதனைத் தந்தது
… … …
பெரிய சேதம் தந்தது.

உலகத்தை நம் உறவாக்கி
உயர்ச்சி பெற ஒன்றினைவோம்!

என்று தான் பிறந்த நாட்டில் இன ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ‘இந்த தேசம் நம் தேசம்’ என்ற பாடலை எழுதியிருக்கிறார்.

பாதைகள் புதிது எனும் பாடலில்

பணக்காரப் பயலுக்கு
பசிகூட புதிது

வறியவருக்கெல்லாம்
வயிரும்தான் கொடிது.

என்று இன்றைய சமுதாயத்தின் இழிநிலை கண்டு குமுறுகிறார்.

ஏதேதோ செய்துபுட்ட
என்னழகைக் கொய்துபுட்ட
மார்கழியில் மாலை தந்து
மதி மயங்க செய்துபுட்ட

அடியே நீ கொன்னுப்புட்டே
தீ விழியால் தின்னுபுட்ட
மடிமீது தல வச்சால்
மயங்காம தள்ளிப்புட்ட

இப்பாடல் மூலம் இந்தியத் திரைப் பாடலாசிரியர்களை மிஞ்சிவிட்டார்.

தேன் ஊறும் உன் கன்னம்
தென்பட்டால் என் உள்ளம்
களவாக உனத்தேடும் மானே

பொல்லாத உன் கைகள்
வில்லாக தினம் மாறி
அம்பாக எனைத் தாக்கும் ஆணே

என்னே சௌந்தரியம்!

ஆணென்று உந்திமிரு சொன்னாச்சு
பெண் தானே என் வலிமை நின்னாச்சு

இப்படியும், சொல்கிறார்.

பறந்து விரிந்த சிந்தனையாளரான இவரின் பார்வையில் சிக்காத அவலங்களுமில்லை. ‘சினிமாப் பாடல்களைத் தாண்டி தேடல் விரிகையில், கவிதாயினி ரிஸ்னா இன்னும் தமிழுலகுக்கு அழகு சேர்ப்பார் என்பது உறுதி’ என்று கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் சொல்லியிருப்பது சாலப்பொருத்தமானது.

ரிஸ்னாவின் முயற்சிகள் மேலும் சிகரம் தொட வாழ்த்துக்கள்.

கவிஞர் தமிழ்நெஞ்சம் அமின் – பிரான்ஸ்


2 Comments

சபா வடிவேலு · ஜூலை 3, 2016 at 10 h 00 min

அருமை

சபா வடிவேலு · ஜூலை 3, 2016 at 10 h 02 min

அருமையான யதார்த்த வரிகள் !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நூல்கள் அறிமுகம்

Moon inside the well

ஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க,

 » Read more about: Moon inside the well  »

நூல்கள் அறிமுகம்

இலங்கையில் சிங்களவர்

இலங்கை அரசின் இனவெறிப் படுகொலைக்குத் துணை நிற்கும் நடுவணரசும் ஏன் தமிழக அரசும், உருசியா, சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளும், ஏனைய உலக நாடுகளும் வரலாற்றுப் பிழை செய்வதை இந்நூல் அரண் செய்கின்றது. தமிழர் யார்?

 » Read more about: இலங்கையில் சிங்களவர்  »

நூல்கள் அறிமுகம்

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.

 » Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம்  »